ஆலப்புழாவில் அடுத்தடுத்து கொலை: 144 தடை உத்தரவு..!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் பிறப்பித்தார்.
ஆலப்புழா மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் இரு தலைவர்கள் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆலப்புழாவில் பாஜக தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இறந்தவர் பாஜக ஓபிசி மோர்ச்சாவின் செயலாளராக இருந்த ரஞ்சித் சீனிவாசன். அதிகாலையில் அவரது வீட்டிற்குள் சிலர் புகுந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக சனிக்கிழமை நள்ளிரவு, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) தலைவர் கே.எஸ் ஷான் படுகொலை செய்யப்பட்டார். ஷானின் கொலைக்குப் பின்னால் பாஜக-ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்கள் இருப்பதாக SDPI குற்றம் சாட்டுகிறது. ரஞ்சித் கொலைக்கு பின்னணியில் SDPI என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பழிவாங்கும் வகையில் தான் இந்த கொலைநடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த இரட்டைக் கொலையை அடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் மோதல் ஏற்படும் பகுதிகள் அனைத்திலும் பலத்த போலீஸ் மற்றும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் நடந்த கொடூர கொலைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை போலீசார் கைது செய்வார்கள் என்றார்.