காவிரி விவகாரம்.. நாளை முழு அடைப்பு போராட்டம்.! பெங்களூருவில் 144 தடை அமல்.!
காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பல்வேறு கருத்து மோதல்கள் அரங்கேறி வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவு படி கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு தொடர் கோரிக்கை வைத்து வருகிறது. அனால் கர்நாடக அரசு , காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை அதனால் தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.
மேலும், காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கனவே நேற்று முன்தினம் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று இருந்தது.
நாளை கர்நாடக முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால், நாளை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரையில் பெங்களூருவில் 144 தடை அமலில் இருக்கும் என பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.
முழு அடைப்பு நடைபெற்றாலும், நாளை அரசு பேருந்து ஓட்டுனர்கள் , நடத்துனர்கள் வேலைக்கு வரவேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. நாளை பெங்களூருவில் 4 பேருக்கு அதிகமாக மக்கள் கூடக்கூடாது. பேரணி ஆகியவற்றை நடத்தக்கூடாது என்றும் பெங்களூரு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.