கேரளாவில் சபரிமலைக்கு எதிரான போராட்டத்தை திறமையாக கையாண்டு சட்டஒழுங்கை பாதுகாத்த கேரள அரசுக்கு பாராட்டுக்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்..
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்களில் ஏறக்குறைய 1400 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது உள்ள பெண்கள் செல்ல அனுமதியில்லை எனும் பாரம்பரிய நடைமுறை நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், கோயில் திறந்தபின் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பிவிடப்பட்டனர்.
இதனால், சபரிமலை கடந்த 5 நாட்களாக மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க 50 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் அனைவரும் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் நேற்று முதல் போலீஸார் தீவிரமாக இறங்கினார்கள். கடந்த இரு நாட்களில் இதுவரை 440 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 1,400 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து மாநில போலீஸார் தலைவர் லோக்நாத் பேரா கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியவர்கள் மீது 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,400 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும், சந்தேகத்துக்குரியவர்கள் 200 பேரின் புகைப்படங்கள் மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது.சபரிமலையில், சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகியஇடங்களில் கூடுதலாகக் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு லோக்நாத் பேரா தெரிவித்தார்.
மேலும், டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து மாநில ஆளுநர் சதாசிவம் பேசினார். அப்போது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுவருவது குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU