14 ஆண்டுகால கொலை வழக்கு.! குற்றவாளியை பிடிக்க உதவிய ஆள்காட்டி விரல் டாட்டூ.!
14 ஆண்டுகளாக கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை ஆள்காட்டி விரலை அடையாளமாக வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுடெல்லியில் 2009 ஆம் ஆண்டு நடந்த கொலையில் சம்பந்தப்பட்ட நபரை பச்சை குத்திய ஆள்காட்டி விரலை அடையாளமாக வைத்து டெல்லியில் உள்ள விகாஸ் நகரில் காவல துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் என்னும் நபர் ஹரியானாவில் உள்ள திக்ரி குர்த் எனும் பகுதியில் வசித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு புடவை வியாபாரம் செய்யும் ராஜா என்பவரின் உடல் கியாலாவில் உள்ள டிடிஏ சந்தையில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் விசித்ரா வீர் கூறுகையில், புடவை வியாபாரியின் வாய் மற்றும் தலையில் இருந்து இரத்தம் வந்தபடி அவரது மார்பில் ஒரு பெரிய கல் கிடந்தது என்றும் இந்த சம்பவம் குறித்து திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நான்காவது நபரான சந்தீப் தலைமறைவானார்.
2010 ஆம் ஆண்டு சந்தீப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்பு ஏசிபி அனில் ஷர்மா தலைமையிலான குற்றப்பிரிவு குழு இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. கைது செய்யப்பட்ட மற்ற மூன்று பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கையில் பச்சை குத்திய மற்றும் துண்டிக்கப்பட்ட விரலைக் கொண்ட ஒரு நபரை போலீசார் தேடத் தொடங்கினர். அவர்கள் டெல்லியின் தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) இயங்கும் வாகனங்களின் விவரங்களை சோதனை செய்தனர்.
நடைபெற்ற சோதனையின் மூலம் கிடைத்த தடயத்தை வைத்து விகாஸ் நகரில் இருந்த சந்தீப்பின் வீட்டிற்கு சென்றனர். அங்கெ வீட்டிலிருந்த சந்தீப்பை காவல் துறையினர் கைது செய்தனர். முதலில் அவரை கண்டதும் காவல்துறையினரால் அடையாளம் காணமுடியவில்லை. பின்னர் அவரது பச்சை குத்தப்பட்டு துண்டிக்கப்பட்ட ஆள்காட்டி விரலை வைத்து அவர் சந்தீப் என காவல் துறையினர் அடையாளம் கண்டனர். சந்தீப்பிடம் கொலை குறித்து விசாரணை செய்ததில் அவர் குற்றத்தை ஒப்பு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், கொலை செய்த பிறகு சந்தீப் முதலில் பீகார் மற்றும் ஜார்கண்டில் கூலி வேலை செய்ய ஆரம்பித்ததாகவும் பிறகு ஜார்கண்டில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.மேலும் இந்த சம்பவத்தை கொலை நோக்கத்தோடு செய்யவில்லை கொள்ளையடிக்கும் நோக்கம் மேட்டுமே இருந்தது என்று சந்தீப் போலீசாரிடம் கூறினார். இந்த சம்பவம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.