சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக பதிவு : அசாமில் 14 பேர் கைது!
சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்ட அசாமை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளம் முழுவதும் இது குறித்த செய்திகள் மற்றும் கருத்துக்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் அனைவரும் அடைக்கலம் தேடி பல நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் பலரும் ஆப்கானிஸ்தானின் மக்கள் நிலையைக் குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதற்கு ஆதரவாக அசாமில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அசாம் மாநில காவல்துறை டிஜிபி அவர்கள் கூறுகையில், சமூக வலைதளங்களில் மக்கள் பதிவுகளை வெளியிடும் பொழுது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.