14 வயது சிறுமியை கொடுமை செய்த போலிசார்!!
14 வயது சிறுமி உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் திருடி விட்டதாக வீட்டின் உரிமையாளர் நொய்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், சிறுமியை போலீசார் கைது செய்தனர். மே 14ம் தேதி கைது செய்யப்பட்ட சிறுமி மே 16ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டார். ஆனால், விடுவிக்கப்பட்ட மறுநாளே சிறுமியை யும், அவரது 17 வயது சகோதரனையும் போலீசார் அழைத்து சென்று காவலில் வைத்தனர். தன்னார்வலர் ஒருவர் தலையிட்டதை தொடர்ந்து சிறுவர் நல வாரியத்தின் உத்தரவின் பேரில் 22ம் தேதி இருவரும் விடுவிக்கப்பட்டனர். சிறுவர் நல வாரியத்தின் உத்தரவுப்படி சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது சிறுமியின் கைகளில் சிகரெட்டால் சுட்ட புண்கள் மேலும் அடித்ததற்கான காயங்கள் இருந்தது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது.
ஊடகங்களில் போலீசாரால் சிறுமி சித்ரவதை செய்யப்பட்ட செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இது தொடர்பாக உத்தரப் பிரதேச டிஜிபி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இது தொடர்பாக 4 வாரங்களில் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று ஆணையிட்டுள்ளது.