கர்நாடகாவில் கருப்பு பூஞ்சையால் 1,370 பேர் பாதிப்பு; 51 பேர் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 1370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையே இன்னும் ஓயாத நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. இந்த கருப்பு பூஞ்சையால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
தற்பொழுது கருப்பு பூஞ்சையால் அம்மாநிலத்தில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுவரை கருப்பு பூஞ்சையால் 1,370 பேர் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 1,292 பேர் மட்டுமே தற்போது அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் இருந்து 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு 51 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.