125 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்க பா.ஜ.க. அரசு இரவு பகலாக உழைக்கிறது !ஸ்வீடனில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி, 125 கோடி இந்தியர்களின் கனவுகளை நனவாக்க, பா.ஜ.க. அரசு இரவு பகலாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ஸ்வீடன் சென்றிருந்த பிரதமர் மோடி, ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சாவளியினரிடையே பேசினார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்வீடன் பிரதமர் நமஸ்கார் என வரவேற்றார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய மோடி, இந்தியாவில் மொழி, பண்பாடு தனித்தனியாக இருந்தாலும், இந்தியர் என்ற பெருமிதம் ஒன்றிணைப்பதாக குறிப்பிட்டார். இந்த ஒற்றுமை உணர்வால்தான் மேரிகோம்,சாய்னா நேவால் போன்றோரின் சாதனைகளை அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்கிறார்கள் என மோடி சுட்டிக் காட்டினார்.
இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இரவையும் பகலையும் பாராமல் உழைக்கக் கூடிய ஒரு அரசு இப்போது இந்தியாவில் உள்ளது என்றும், மக்களின் கனவுகள் நனவாக ஓயாமல் பாஜக அரசு உழைக்கிறது என்றும் மோடி தெரிவித்தார்.
உலகின் 5 மிகச்சிறந்த விண்வெளித் திட்டங்களின் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளதாக கூறிய பிரதமர், இந்நாட்டின் தொழில்நுட்பத்திறனை உலகமே வியந்து பார்ப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஸ்வீடன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி விமானம் மூலம் லண்டனுக்குப் புறப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.