கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 124 வயது மூதாட்டி..!
நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பதால், அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசியை குறித்த வதந்திகளால் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வருகிறார்கள். இந்நிலையில் 124 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனால் வீடு வீடாக சென்று அம்மாவட்ட அரசு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. அப்போது, 124 வயது கொண்ட ரெஹத்தி பேகம் என்ற மூதாட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டியிருக்கிறார். இதனால் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
அதன்பிறகு, 124 வயது கொண்ட இந்த மூதாட்டி உலகத்திலேயே அதிக நாள் வாழ்ந்த நபர் என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளனர். கின்னஸ் புத்தகத்தில் 118 வயதுடைய கேன் தனகா என்ற ஜப்பானிய பெண் மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த நபர் என்று அறியப்படுகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெஹத்தி பேகம் என்ற மூதாட்டி 124 வயதுடையவர் என்பதை இவரது ரேஷன் அட்டையை வைத்து தெரிந்துகொண்டுள்ளனர். மேலும், இவரின் வயதை உறுதிப்படுத்த அடையாள அட்டை இல்லாததால் ரேஷன் அட்டையை வைத்து கணித்துள்ளனர்.