கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய 120 வயது மூதாட்டி..!
காஷ்மீரில் தோலி தேவி என்ற 120 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றையே அனைவரும் ஆதாரமாக கொண்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணியை ஆரம்பித்தனர். இந்தியாவில் இதுவரை 19,50,04,184 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,30,58,913 ஆக உள்ளது.
இந்நிலையில், 120 வயது மூதாட்டி தோலி தேவி என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள உதம்பூர் மாவட்டத்தின் கட்டியாஸ் கிராமத்தை சேர்ந்தவர். கொரோனா தடுப்பூசி செலுத்திய மூதாட்டி தோலி தேவி கூறுகையில், இந்த கொடிய கொரோனா நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி. அதன் காரணத்தினால் தான் நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.
அதனால் நீங்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள். நானே பயமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது உங்களுக்கு என்ன..? இந்த தடுப்பூசியால் நான் எந்தவொரு பக்கவிளைவையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். பாட்டியின் விழிப்புணர்வை கண்டு பலரும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.