தீ விபத்து வதந்தி., 12 பேர் பரிதாப பலி! மகாராஷ்டிரா ரயில் விபத்தில் நடந்தது என்ன?
மகாராஷ்டிரா புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள், ரயிலில் தீ பிடித்தது எனும் வதந்தியை நம்பி கிழே இறங்கி ஓடுகையில் எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயமுற்றனர் இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்தானது ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி மற்றும் பர்தானே நிலையங்களுக்கு இடையே பச்சோரா அருகே நடைபெற்றுள்ளது .
ரயில் விபத்து எப்படி நடந்தது?
ஜல்கான் மாவட்ட பொறுப்பு மாநில அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் இந்த விபத்து எப்படி நடைபெற்றது என செய்தியாளர்களிடம் கூறுகையில், ” உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் பொதுப் பெட்டியில் (முன்பதிவில்லா) பயணித்த பயணிகள் தான். ரயிலை நிறுத்த யாரோ ஒருவர் ரயில் பெட்டியில் உள்ள அவசரகால சங்கிலியை இழுத்துள்ளனர். சங்கிலியை இழுத்ததை அடுத்து அவசரகால பிரேக் ரயிலில் பயன்படுத்தப்பட்டு ரயில் சட்டென நிறுத்தப்பட்டது.
அவசரகால பிரேக் என்பதால் தண்டவாளத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் பறந்துள்ளன. இதனை பொதுப் பெட்டியில் இருந்த பயணிகள், ரயிலில் தீப்பிடித்துவிட்டது என வதந்தி பரவியதை நம்பி, அச்சத்தில், ரயிலில் இருந்து இரு வழிகளிலும் குதித்து ஓடியுள்ளனர். அப்போது அருகே இருந்த தண்டவாளத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பயணிகள் மீது அதே வேகத்தில் மோதியது. இதன் விளைவாகவே இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது.” என அமைச்சர் பாட்டீல் விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் ஸ்வப்னில் நிலா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ ரயிலில் தீ பிடித்தது எனும் வதந்தியால் பயணிகள் கிழே குதித்து ஓடுகையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவசரகால சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியது யார், எதற்காக ரயிலை நிறுத்தினார்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது.” என தெரிவித்தார்.
3 நேபாள நாட்டினர்..,
ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ” புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்ததில் 9 பேர் ஆண்களும், 3 பேர் பெண்களும் அடங்குவர். அவர்களில் 3 பேர் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள். நேபாள குடிமக்கள் உட்பட ஆறு பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. காயமடைந்த 10 பேரில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் :
மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில அரசு சார்பில் உயிரிழநதோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் அனைத்து மருத்துவச் செலவுகளையும் மாநில அரசு ஏற்கும் என்றும் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.