உயிரை காப்பாற்ற 12 மணிநேரம் பிபிஇ கிட்டுடன் 2,500 கி.மீ. விமானத்தில் பறந்த மருத்துவர்கள்..!
நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக 12 மணிநேரம் பிபிஇ கிட்டுடன் 2,500 கி.மீ. தொலைவு விமானத்தில் மருத்துவர்கள் பயணித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரை காப்பாற்றி வருகின்றனர். அப்படி நோயாளியின் உயிரை காப்பாற்ற 12 மணி நேரம் பிபிஇ கிட்டுதான் 2,500 கி.மீ தொலைவு பயணித்துள்ளனர் ஒரு மருத்துவர்கள் குழு. இது குறித்து இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கோவினி பாலசுப்பிரமணி கூறியிருப்பதாவது, மே மாதத்தின் மத்தியில் லக்னோவை சேர்ந்த 8 மாதக்குழந்தையின் தந்தையான ஒருவருக்கு கடுமையாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் தெரியவந்தது. மேலும், 30 வயதாகும் அந்நபருக்கு கடுமையான சுவாசப்பிரச்சனை இருந்துள்ளது.
அந்த நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு வணிக விமானத்தை எடுத்துக்கொண்டு டெல்லிக்கும் பின்னர் அங்கிருந்து லக்னோவிற்கும் சென்றுள்ளனர். நோயாளியை அடைந்த மருத்துவர்கள் குழு அவரின் ஈ.சி.எம்.ஓ நிலையை கவனித்துள்ளனர். மிக மோசமாக இருந்ததால், இவரை அங்கிருந்து ஈ.சி.எம்.ஓ உதவியுடன் தனியார் விமானத்தில் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த பயணம் மிகவும் ஆபத்தான ஒன்றாக இருந்ததாக மருத்துவர் கோவினி தெரிவித்துள்ளார். விமானத்தில் தொடர்ந்து நோயாளியின் பிஓ2 நிலையை பராமரிக்க வேண்டும் எனவும், அவரது அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் 5 மணிநேர பயணமான இது எங்களுக்கு சவாலாக இருந்தது என்று கூறியுள்ளார்.
ஈ.சி.எம்.ஓ என்பது நோயாளியின் உடலுக்கு வெளியே இரத்தத்தை இதய-நுரையீரல் இயந்திரத்திற்கு செலுத்தி, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட இரத்தத்தை உடலில் உள்ள திசுக்களுக்கு திருப்பி அனுப்பும் செயலாகும். தற்போது சென்னைக்கு நாங்கள் விமானத்தில் வந்து 35 நாட்கள் ஆகிவிட்டது. நோயாளி ஈ.சி.எம்.ஓ உதவியுடன் தான் இருந்து வருகிறார். இவருக்கு நுரையீரல் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. நுரையீரல் நன்கொடையாளருக்கு காத்திருப்பதாகவும், இவரது நுரையீரலை புதுப்பிக்கவும் முயற்சி செய்வதாக கூறியுள்ளார் டாக்டர் கோவினி. எங்களின் குழு அன்று சரியான நேரத்தில் செல்லவில்லை என்றால் 2 அல்லது 3 நாட்களில் அவர் இறந்திருப்பார் என்று கூறியுள்ளார். டாக்டர் கோவினி மற்றும் அவரது மருத்துவக்குழுவை போன்று பல மருத்துவர்கள் இந்த தொற்று காலத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.