11வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்!
நாடாளுமன்றம் இன்றும் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து ஆகிய பிரச்சனைகளால் முடங்கியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, ஆந்திரத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்ககக் கோரி, தெலுங்கு தேச எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரியும் கலந்துகொண்டார்.
பின்னர் மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆந்திரத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல மக்களவை கூடியதும், அதிமுக எம்.பி.க்களும், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சி பயனளிக்காததால், நண்பகல் வரை மக்களவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.