கொரோனாவிற்கு குட் பை சொல்லிய 105 வயது மூதாட்டி!
கேரளாவில் கொரோனாவை வென்ற 105 வயது மூதாட்டி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாலுக்குனால் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில், கேரளாவில், அஸ்மா பீவி என்ற 105 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், கொல்லம் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று (புதன்கிழமை) குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இவருக்கு அவரது மகளிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறப்பாக அமைக்கப்பட்ட மருத்துவ வாரியம் சிகிச்சையை மேற்பார்வையிட்டது. சில சந்தர்ப்பங்களில் அவரது நிலை மோசமடைந்தாலும், மீண்டும் போராடி கொரோனாவை வென்றுள்ளார்.
இதற்கு முன் கேரளாவில், 93 வயதான ஆணும் 88 வயதான பெண்ணும் குணப்படுத்தப்பட்ட நிலையில், அஸ்மா பீவி தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது கேரளாவில் மிக அதிகமான வயதில் குணமடைந்து வீடு திரும்பிய மூதாட்டி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.