துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 பேர் பலி ..!
வட மாநிலங்களில் பத்து நாட்கள் தசரா பண்டிகை நடைபெறும்.இந்த பண்டிகையின் பொது இடங்களில் துர்க்கை அம்மன் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் தசரா பண்டிகை முடிவடைந்ததைத் தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலைகளை ஆறுகள் மற்றும் குளங்களில் கரைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
அப்போது ராஜஸ்தான் தோல்பூர் பகுதியில் ஒரு துர்க்கை அம்மன் சிலையை அங்கு உள்ள பர்பதி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆற்றில் குதித்த ஒரு சிறுவன் மூழ்கியதை தொடர்ந்து அவனை காப்பாற்ற அடுத்தடுத்து தொடர்ந்து பலர் குதித்தனர்.
இதில் 10 பேர் நீரில் மூழ்கினர்.அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இறுதியாக 10 பேரும் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.