பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் 10 அமைச்சர்கள் பதவியேற்பு..!
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட்,கோவா,பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளது. அதன்படி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் மார்ச் 16 ஆம் தேதியன்று பதவியேற்றார்.சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா நடைபெற்ற நிலையில்,பகவத் மானுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர்கள் பதவியேற்பு
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான புதிய அமைச்சர்கள் இன்று சண்டிகரில் பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்ற அமைச்சர்கள் விபரம்
இரண்டு மருத்துவர்கள் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளார். அதன்படி, சட்டப்பேரவை உறுப்பினர்களான ஹர்பால் சிங் சீமா, மருத்துவர் பல்ஜித் கவுர், ஹர்பஜன் சிங், மருத்துவர் மவிஜய் சிங்லா, குர்மிர் சிங் மீட் ஹையர், ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், லால் சந்த் கத்ருச்சக், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர், பிரம் ஷங்கர் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.