“கடந்த 11 நாட்களில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம்!”- போக்குவரத்துக் கழகம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து செப்டம்பர் 1 முதல் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து செப்டம்பர் 1 முதல் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக பேருந்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, மாநகர பேருந்துகள் மூலம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.