வாரிசு சண்டை….உடைந்தது கட்சி…கட்சியும் , சின்னமும் பரிசளிப்பு…!!
வாரிசு சண்டையால் இந்திய தேசிய லோக்தளம் கட்சி உடைந்தது. புதிய கட்சி தொடங்கப்போவதாக அஜய் சிங் சவுதாலா அறிவித்துள்ளார்.
இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அவருடைய மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் அபே சவுதாலா கட்சியை நிர்வகித்து வருகிறார். ஆனால் அவருடைய தலைமையை அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களும் எதிர்த்து வந்தனர். இதனால் ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தபடியே அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களையும் கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் சிறையில் இருந்து பரோலில் வந்த அஜய் சிங் சவுதாலா, தன் மகன்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனையடுத்து அஜய் சிங் சவுதாலாவும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு எதிராக அஜய் சிங் சவுதாலா போட்டி கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய அஜய் சிங் சவுதாலா, ‘கட்சியையும், சின்னத்தையும் எனது சகோதரனுக்கு பரிசாக வழங்கி விடுகிறேன். நான் புதிய கட்சி தொடங்க போகிறேன்’ என்று தெரிவித்தார். வாரிசு சண்டை காரணமாக கட்சி இரண்டாக உடைந்து உள்ளது.
dinasuvadu.com