வாஜ்பாய் உடல்நலம் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் சென்று விசாரிப்பு..!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நலம் பற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகிறார்கள். அதன்படி, தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் பற்றி விசாரித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்த மூத்த தலைவர். வாஜ்பாயின் உடல்நலம் பற்றி அவரது வளர்ப்பு மகள் நமீதாவிடம் விசாரித்தேன். உடல்நிலை முன்பைவிட முன்னேறி இருப்பதாக அவரும், உறவினர்களும் தெரிவித்தனர். அவர் பூரண நலம் பெற, கருணாநிதி சார்பிலும், மு.க.ஸ்டாலின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்தேன்’ என்றார்.