வட இந்தியாவில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய கடும் எதிர்ப்பு…!
வட இந்தியாவில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான போராட்டங்களின் போது பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களை விசாரணை இன்றி கைது செய்ய கூடாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு ஏற்றாற் போல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்தவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக கூறி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது பீகாரின் பார்மர் பகுதியில் அரசு வாகனங்கள் உள்ளிட்டவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. பாட்னா, கயா, பகல்பூர், ஆரா, நாலந்தா உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் மீரட், ராஜஸ்தானின் பரத்பூர், பஞ்சாபின் பாட்யாலா உள்ளிட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது. மத்தியப்பிரதேசத்தின் பிந்த் பகுதியில் பீம் சேனா மற்றும் பஜ்ரங்க தள அமைப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. மொரேனா பகுதியில் வன்முறையைக் கட்டுப்படுத்த கூட்டத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ராகுல் பதக் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
ஜார்க்கண்டின் ராஞ்சி பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் – பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய பெண்கள் உள்பட பலரும் போலீசாரால் அடித்து விரட்டப்பட்டனர்.
பல்வேறு எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு வன்கொடுமை சட்டம் குறித்து அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.