பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வேதுறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
ராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள மேற்கண்ட இரு ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தற்கு கைமாறாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பினாமி நிறுவனத்துக்கு 3 ஏக்கர் வீட்டுமனை லஞ்சமாக பெறப்பட்டதாக தெரியவந்தது.
இந்த விவகாரம் முடிந்த பின்னர் வேறொருவருக்கு சொந்தமாக இருந்த அந்த பினாமி நிறுவனம் லாலுவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பெயரில் மாற்றப்பட்டது. 2010-2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த பரிமாற்றங்கள் முடிவடைதற்குள் ரெயில்வே மந்திரி பதவியை லாலு ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் லாலு குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக லாலு, ரப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவின் தனாபூர் பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலம் மற்றும் பாட்னாவில் உள்ள 11 பிளாட்களை உடைய மற்றொரு இடத்தையும் பரிமுதல் செய்ய அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, வணிக வளாகம் கட்டுவதற்காக இருந்த 11 பிளாட்களை உடைய சுமார் 44.75 கோடி மதிப்புடைய லாலுவின் குடும்பத்திற்கு சொந்தமான இடத்தை இன்று அமலாக்கத்துறையினர் ஜப்தி செய்துள்ளனர்.