ரூ. 339 கோடி சொத்து!16 கார்களுக்கு சொந்தக்காரர்!தேனிர் விற்று வாழ்க்கையை தொடங்கியவர் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டி !
தீவிர பிரச்சாரம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்காக நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியான பாஜகவும்,ஆளும் கட்சியான காங்கிரஸூம் கடும் போட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, பெங்களூரு பொம்மனஹள்ளி தொகுதியில் களம் இறங்கியுள்ள சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் அவரும் ஒருவர். 339 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள அவர் 16 கார்களுக்கு சொந்தக்காரர். 43 வயதாகும் அவர் ஏழ்மையான நிலையில் இருந்து வாழ்வில் முன்னேறியவர். தேனிர் விற்று வாழ்க்கையை தொடங்கி அவர் பல தொழில்கள் செய்து இன்று 339 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வைத்துள்ளார்.
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அனில் குமார், சிறு வயதில் தந்தையை இழந்தவர். மிகுந்த வறுமையில் வாழ்ந்த இவரது பள்ளி படிப்பை பாதியிலயே விட்டு விட்டார். அவரது தாயார் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு வேலை தேடி பெங்களூரு வந்த நிலையில், வேலை இல்லாமல் சாலையிலும், கடை வாசலிலும் படுத்து உறங்கி இரவு நேரத்தை கழித்துள்ளார். அதுபோன்று கடை ஒன்றில் படுத்து இருந்த அவருக்கு அந்த கடையின் உரிமையாளர் வேலைக் கொடுத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின், பெங்களூருவில் உள்ள சிறிய கடைகளுக்கு தேநீர் விற்கும் பணியை தொடங்கினார் அனில் குமார். 1990களில் பெங்களூருவில் பெரிய அளவில் ஐடி நிறுவனங்கள் வளர தொடங்கி சமயம். அப்போது ஐடி நிறுவனங்களுக்கு தேநீர் விற்க தொடங்கிய அனில் குமாரின் வர்த்தகம் பெருக தொடங்கியது. இதனால் உணவுக்கு கஷ்டப்பட்ட நிலை மாறி, பணத்தை சேமிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
இந்த சூழ்நிலையில் திருமணம் முடிந்தது வேறு சில தொழில்களையும் செய்யத் தொடங்கினார் அனில் குமார். வீடு கட்டுவதற்காக சேமித்த பணத்தில் சிறிய இடத்தை அவர் வாங்கினார். ஆனால் வீடு கட்டும் முன்பாகவே அவரை சிலர் அணுகி அந்த இடத்திற்கு இரு மடங்கு தொகை தருவதாக கூறி விலைக்கு கேட்டனர். பரவாயில்லையே! இடம் வாங்கி விற்றால் சம்பாதிக்கலாம் போல என்ற எண்ணம் அவரது மனதில் ஏற்பட்டது. நிலம், வீடு வாங்கி விற்கும் வேலையை தொடங்கினார்.
அப்போது ரியல் எஸ்டேட் தொழில் அசூர வேகத்தில் சென்று கொண்டு இருந்ததால் நல்ல லாபம் ஈட்ட முடிந்தது. வீடுகளை வாங்கி சில காலம் வைத்திருந்து பின்னர் விற்று விடுவது அனில் குமாரின் தொழில் முறை. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. மிக வேகமாக வளர்ந்த அவர் பல லட்சங்களை சம்பாதிக்க தொடங்கி கோடிகளை தொட்டார். அதன் தொடர்ச்சியாக வேறு சில தொழில்களையும் செய்த அவருக்கு காலம் கைகூடி வந்ததால் பெரிய தொழிலதிபராக உயர்ந்தார்.
இதன்பிறகு, வீடுகளை வாங்கி விற்பனை செய்யும் பணியில் கால்பதித்துள்ளார். அதன்பிறகு தொடர்ந்து ஏறுமுகமாகவே அவரது வருவாய் இருந்துள்ளது. ஆறு ஆண்டு இடைவெளிகளில் பல கோடி ரூபாய்க்கு அதிபதியான அனில் குமார், பொம்மனஹள்ளியில் சொந்தமாக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அவர் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கடும் போட்டியாக விளங்கி வருகிறார். அவரது சூறவாளி பிரச்சாரத்தை கண்டு மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர். தனக்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறும் அனில் குமார், சாதாரண மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவன் எனக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.