ராஜீவ் கொலை வழக்கு : விடுதலை மறுக்கப்பட்டது ஏன்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டது ஏன் என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
குடியரசுத் தலைவரின் உத்தரவின்பேரில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஏழு பேரையும் விடுவித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 16 பேரின் படுகொலை வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தால் மிகவும் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட சதித்திட்டம் என்றும், இச்சதியை அரங்கேற்ற பெண்ணை மனித வெடிகுண்டாகப் பயன்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிதினும் அரிதாக இந்த வழக்கு இருப்பதாகவும் நீதிமன்றங்கள் இந்த வழக்கின் பயங்கரமான பின்னணியைக் கருத்தில் கொண்டே தண்டனை வழங்கியிருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.