ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று! ராகுல் காந்தி உருக்கமான ட்விட்..!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வெறுப்பு உணர்ச்சியை கொண்டுள்ளவர்கள் அதற்கு சிறைபட்டவர்கள் ஆவர் என எனது தந்தை எனக்கு பாடம் கற்று கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனைவரின் மீதும் அன்பு கொள்ள வேண்டும், அனைவரின் உணர்வையும் மதிக்க வேண்டும் என எனது தந்தை கற்று கொடுத்ததற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என ராகுல் கூறியுள்ளார். இதனை அவரது நினைவு நாளில் அதனை நான் நினைவு கூர்கிறேன். இது போன்ற விலை மதிக்க முடியாத சிந்தனைகளை பரிசாக மகனுக்கு எனது தந்தை வழங்கியுள்ளார். உங்களை (ராஜீவ் காந்தி) விரும்பும் அனைவரும் உங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்திருப்போம் எனவும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.