ராஜிவ் கொலை வழக்கு அந்த 7 பேர்..!!
சிறைவாசம் அனுபவிக்கும் 7 பேர் – யார் இவர்கள்?
1991-ம் ஆண்டு மே 21-ம் நாள்….தமிழகத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி சிறீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நளினி. 1991-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட இவரது ஒரே மகள் ஹரித்ரா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், 1991-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி கைதானார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உளவுப்பிரிவில் பங்காற்றியவர்.
மூன்றாவது குற்றவாளியான சிறீ ஹரன் என்கிற முருகன், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 9 சகோதரிகளுடன் பிறந்தவர். 1987-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1991-ம் ஆண்டு பிப்ரவரியில் நளினியுடனான முதல் சந்திப்பிலேயே, காதல் மலர, அதே ஆண்டு ஏப்ரல் 22-ல் திருப்பதியில் திருமணம் நடந்தேறியது. இவர், 1991-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் ராபர்ட் பயஸ் என்கிற குமாரலிங்கம். இவர் 1991-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்ட இவரது தண்டனை காலம் 2005-ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால், விடுதலை மட்டுமே இன்று வரை கை கூடவில்லை. தன்னை விடுவிக்கக்கோரி 2009-ம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் ராபர்ட் பயஸ் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டும் பலனில்லை.
10-வது குற்றவாளியான ராபர்ட் பயஸின் உறவினர் ஜெயக்குமார், 1991-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்ட இவரும், இன்று வரை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.16-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரனும், ஆயுள் தண்டனை கைதி மட்டுமே. ஆனால் இன்று வரை சிறைக் கொட்டடியில் தவித்து வருகிறார். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இவருக்கு 2012-ம் ஆண்டு பிப்ரவரியில், 2 வாரங்கள் மட்டும் பரோல் வழங்கியது.
18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் தான் பேரறிவாளன். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த இவர், திராவிடர் கழகக் குடும்ப பின்னணியைக் கொண்டவர். குயில்தாசன், அற்புதம்மாள் தம்பதியரின் மகன். ஒரே தங்கை அன்புமதி.1991-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்ட பேரறிவாளன், ராஜிவ் கொலைக்குப் பயன்படுத்திய வெடிகுண்டுக்காக 2 வோல்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்ததாக மட்டுமே குற்றச்சாட்டு. இவரது தூக்குத் தண்டனையை 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதியே ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
ஆயுள்தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் இருந்து மீள முடியாத பேரறிவாளன், சிறைக் காலத்திலும் படிப்பில் கவனம் செலுத்தி எம்.சி.ஏ. படிப்பை முடித்துள்ளார். தனது சிறை அனுபவத்தை “An Appeal For The Death Row” என்ற ஆங்கிலப் புத்தகமாகவும் எழுதியுள்ளார் பேரறிவாளன்.
DINASUVADU