மராட்டியம், உத்தரபிரதேசம், நாகாலாந்து உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த 28-ந் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பெரும்பான்மை யான இடங்களில் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து வருகிறது, பிராந்திய கட்சிகளும் அதற்கான பணியில் இறங்கி உள்ளன. ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்ற பின்னர் அக்கட்சியை அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் (வயது 27) வெற்றிக்கரமாக முன்னெடுத்து செல்கிறார்கள். 2019 பாராளுமன்றத் தேர்தலில் பீகாரில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைப்பதிலும், பாரதீய ஜனதாவிற்கு எதிரான வியூகத்தை வலுப்படுத்துவதிலும் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார்.
அவர் ஆங்கில மீடியாவிற்கு அளித்து உள்ள பேட்டியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதனை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிஉள்ளார்.
இந்தியா முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் முடிவுகள் பற்றிய உங்களுடைய கருத்து? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய தேஜஸ்வி யாதவ், பொய் மற்றும் ஏமாற்று வித்தையின் அடிப்படையில் ‘மோடி அலை’ உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகி உள்ளது. அவர்கள் ஆட்சிசெய்த சமூக வலைதளங்கள் இப்போது அவர்களுக்கு பிரச்சனையாகி உள்ளது, மக்கள் அனைவரும் கேள்வியை கேட்க தொடங்கிவிட்டார்கள். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் பாரதீய ஜனதாவை தடுத்து நிறுத்த வேண்டும். நமக்கு ஆர்.எஸ்.எஸ். தலைநகரில் (நாக்பூர்) இருந்து வரும் சட்டம் வேண்டாம், அம்தேகாரின் அரசியலமைப்பு மட்டும்தான் வேண்டும் என்றார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், பாரதீய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தால் பிரதமராக தயார் என்று ராகுல் காந்தி கூறியது தொடர்பாக பேசிய தேஜஸ்வி யாதவ், அவருடைய கூற்றில் தவறு கிடையாது. யார் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம், 2014-ல் பாரதீய ஜனதா ஆட்சியமைக்க கோரியது போன்று. பிற கட்சிகள் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும் அவர்களும் உரிமை கோருவார்கள். உரிமை கோருவதில் என்ன தவறு இருக்கிறது? ஜனநாயகத்தில் அனைவருக்கும் தங்களுடைய மனதில் உள்ளதை வெளிப்படுத்த உரிமை உள்ளது. இதில் முக்கியமானது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியா? தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியா? என்பதுதான். இதில் நமக்கு தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணி அமைத்து இருந்தால், அவர்கள் எளிதாக ஆட்சியை அமைத்து இருக்கலாம். எங்கள் நிலையை பொறுத்தவரையில் எங்களுக்கு 2-3 மாநிலங்களில் செல்வாக்கு உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக இணைக்க போராட வேண்டும். ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதனை யாரும் தடுக்க முடியாது என கூறிஉள்ளார்.