ரபேல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு?
ரபேல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது டசால்ட் நிறுவனத்துடன் 36 ரபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 126 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி செய்துகொண்ட ஒப்பந்தத்தால் ஒரு விமானத்தின் விலை 300 சதவீதம் அதிரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களுக்கு 56 ஆயிரம் கோடி வழங்குவதா என காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைக்க, பாஜக தலைவர்கள் இதை கடுமையாக மறுத்தனர்.
காங்கிரஸ் ஆட்சியில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட பிரதமர் மோடி செய்து கொண்ட ஒப்பந்தம் சிறப்பானது என அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வந்தனர். இதனிடையே இந்த ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதிலும் ஊழல் நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் ரபேல் ஒப்பந்த பேரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.