ரஃபேல் போர் விமான ஊழல் பற்றி கேள்வி…சிபிஐ இயக்குநர் மாற்றம்..ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!
ரஃபேல் போர் விமான ஊழலை கேள்வி எழுப்பியதால் சிபிஐ இயக்குநர் மாற்றப்பட்டார் என்று ராகுல் காந்தி கடுமையாக மோடி அரசை சாடியுயுள்ளார்..
ஜலாவர் மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:”பிரதமர் மோடி சட்டத்தை மீறிச் செயல்பட்டுள்ளார். சிபிஐ இயக்குநரை நியமிக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவையெல்லாம் மீறி புதிய சிபிஐ இயக்குநரை மோடி நியமித்துள்ளார்.
வங்கியில் ரூ.35 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சியிடம் இருந்து ரூ.25 லட்சம் பணத்தை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மகள் நிறுவனம் பெற்று இருக்கிறது. ஆனால், அவர்கள் மீது எந்த விசாரணையும் சிபிஐ இதுவரை நடத்தவில்லை.
பிரதமர் மோடி வாக்கு கேட்கும்போது, நான் நாட்டின் காவல்காரர் என்று கூறுகிறார்.ஆனால் நாட்டின் காவலர்காரரே திருட்டில் ஈடுபடுகிறார்.
விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட வேளாண் கடனைத் தள்ளுபடி செய்யாத பிரதமர் மோடி, 15 முக்கிய தொழிலதிபர்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்யக் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஒரு விவசாயி பயிர்க்கடனைச் செலுத்த முடியாவிட்டால், அவர் வேண்டுமென்றே கடனைச் செலுத்த முடியாதவர் என்று பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்களுக்கு வங்கிகள் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து, என்ன உதவி தேவை என்று கேட்கிறார்கள்.
லலித் மோடி லண்டனில் வசித்து வருகிறார். ஆனால், அவர் ராஜஸ்தான் முதல்வர் மகனுக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்புகிறார். வங்கிக்கடனைச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையா நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்த பின் தான் நாட்டை விட்டுச் சென்றார். வைர வியாபாரி மெகுல் சோக்சி, நிதி அமைச்சர் ஜேட்லியின் மகளின் வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இருக்கிறார்.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை பிரதமர் மோடி பயன்பாடில்லாத, உதவாத திட்டம் என்று உதாசினப்படுத்துகிறார்.
மக்களையும், கடினமாக உழைத்துப் பணம் ஈட்டும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரை ஏமாற்றி அவர்களின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து 15 முக்கிய தொழிலதிபர்களுக்கு மோடி அரசு கொடுக்கிறது.சமையல் எரிவாயு விலை தொடர்ந்து விலை உயர்ந்து சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. விவசாயிகள், ஏழை மக்கள், சாமானிய மக்கள் வாங்கும் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாக்குவோம் என்று பிரதமர் மோடியும், முதல்வர் வசுந்தரா ராஜேவும் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை.காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது ரூ.35 ஆயிரம் கோடி 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது. பிரதமர் மோடி, முதல்வர் வசுந்தரா, அனில் அம்பானி ஆகியோர் வேலைவாய்ப்பு அளித்தார்களா?”இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
DINASUVADU