யுனெஸ்கோ எச்சரிக்கை…! 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் …!
யுனெஸ்கோ, 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் என ஆய்வின் முடிவில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நீர்வளம் குறித்த ஆய்வு அறிக்கையை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. அதில் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் என்றும், நாட்டின் மத்தியப் பகுதிகளில் நிலத்தடி நீர் இருப்பில் 40விழுக்காடு குறைந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பாதியளவு ஆறுகள் பெருமளவில் மாசுபட்டுள்ளதாகவும், நிலத்தடிநீரும் குடிக்கத் தகுதியற்றுப் போய்விட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் 121ஆக இருந்த மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை தற்போது 275ஆக உயர்ந்துள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் விடப்படுவதே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் 49ஆறுகளும் அசாமில் 28ஆறுகளும், மத்தியப் பிரதேசத்தில் 21ஆறுகளும், குஜராத்தில் 20ஆறுகளும் மேற்கு வங்கத்தில் 17ஆறுகளும் மாசுபட்டுள்ளன. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆறுகளில் நீரின் அளவு பெருமளவு குறைந்துள்ளதையும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. காவிரியில் மேட்டூர் அணைக்குக் கீழும், கிருஷ்ணாவில் ஸ்ரீசைலம் அணைக்குக் கீழும், கோதாவரியில் ராஜமுந்திரி அணைக்குக் கீழும் வறண்டு காணப்படுவதை அது சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தப் பகுதிகளில் நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்களைத் தவிர்த்துக் குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களைப் பயிரிடுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 2030ஆம் ஆண்டில் நமக்குத் தேவைப்படும் நீரில் பாதியளவே கிடைக்கும் எனத் திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மிகிர் ஷா தெரிவித்துள்ளார். தனி மனிதர் ஒருவருக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு ஆயிரத்து 951ஆம் ஆண்டில் ஐயாயிரத்து 177கன மீட்டராக இருந்தது.
2011ஆம் ஆண்டில் ஆயிரத்து 545கனமீட்டராகக் குறைந்துள்ளது. உலக அளவில் தனிமனிதருக்கு சராசரியாக எழுநூறு கனமீட்டர் தேவைப்படுகிறது. நீர்வள அமைச்சகமோ, மத்திய நீர் ஆணையமோ தண்ணீர்ச் சிக்கலைச் சமாளிப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை என மகசேசே விருதுபெற்ற ராஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசோ மாநில அரசுகளோ தண்ணீர்ச் சிக்கலைச் சமாளிக்கத் தொலைநோக்குப் பார்வையுடன் எந்தத் திட்டத்தையும் தீட்டவில்லை என்பதையும் ராஜேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.