மோடி ஒரு ‘தேள்’ என்று கூறிய சசி தரூர் மீது அவதூறு வழக்குப் பதிவு..!!
பெயர் கூறாத ஆர்.எஸ்.எஸ். நபர் கூறியதாக மேற்கோள் காட்டி பிரதமர் மோடியை ‘சிவலிங்கத்தின் மீதமர்ந்துள்ள தேள்’ என்று சசி தரூர் வர்ணித்தது பெரிய சர்ச்சைகளைக் கிளப்ப சசி தரூருக்கு எதிராக குற்ற அவதூறு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
டெல்லி பாஜக தலைவர் ராஜீவ் பப்பார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார், அதில் அவதூறு செய்யும் நோக்கத்துடன் சசி தரூர் கூறிய வார்த்தைகள் இந்துக் கடவுளைக் கேவலப்படுத்துவதோடு, நாட்டின் பிரதமரையும் அவதூறு செய்வதாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். வழக்கறிஞர் நீரஜ் என்பவர் மூலம் இந்த அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த பெயர் தெரியாத நபர் கூறிய போது, சிவலிங்கத்தின் மீதமர்ந்த தேள் போன்றவர் மோடி, தேளை தட்டி விட நினைத்தால் நம் கையை கொட்டிவிடும், அதனை வேறு எதனைக் கொண்டும் அடிக்கவும் முடியாது, காரணம் அது சிவலிங்கத்தை இழிவு படுத்துவதாக அமையும், ஹிந்துத்துவா இயக்கம் அதன் மீதான மோடியின் இருப்பு ஆகியவை பற்றிய மிகச் சிக்கலான உறவுகளை நுட்பமாகத் தெரிவிக்கும் உருவகமே சிவலிங்கத்தின் மீதமர்ந்த தேள்” என்று சசி தரூர் பேசியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். காரர் கூறியது 6 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போது மோடி பிரதமரும் இல்லை ஆனால் இப்போது அவரது புகழ் உலகம் முழுதும் பரவியுள்ளது. தற்போது எங்கிருந்தோ குழிதோண்டி இந்த வர்ணிப்பைப் பயன்படுத்துவது இந்தக் காலக்கட்டத்தில் அவதூறு நோக்கம் கொண்டது என்று ராஜீவ் பப்பார் தன் மனுவில் கூறியுள்ளார்.
குற்ற அவதூறு வழக்கு அற்பத்தனமானது என்று சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிறார் அவர்.வெளியான ஒரு உள்ளடக்கத்திலிருந்து மேற்கோள் கூடக் காட்டக்கூடாது என்று கூறினால் நாம் எங்கு போய் முடிவோம்? நம் ஜனநாயகம் எங்கு போகிறது? பேச்சுச் சுதந்திரம் எங்கே?” என்று சசி தரூர் பாய்ந்துள்ளார்.
dinasuvadu.com