மோடி, அமித்ஷா, மோகன் பகவத் 3 பேரிடம் இந்தியா அடிமைப்பட்டு கிடக்கிறது – ராகுல்காந்தி தாக்கு..!
அகில இந்திய காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான தேசிய மாநாடு டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
நமது நாடு இன்று, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 3 தலைவர்களின் கைகளில் அடிமைப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதம் முதல் ஓராண்டுக்குள்ளாக இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு எதிராக ஒன்றிணையும். அப்போது, நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பாகவத் ஆகியோர் இந்தியாவின் பலம் என்ன என்பதை அறிவார்கள்.
‘இந்தியாவை 3 நபர்களால் ஆட்சி செய்ய முடியாது. இந்தியாவை அதன் மக்களே ஆட்சி செய்கின்றனர்’ என்பதையும் அவர்கள் உணர்வார்கள். பா.ஜ.க.வில் உள்ள எம்.பி.க்கள் உள்ளிட்ட எவருக்குமே பேச அனுமதியில்லை. அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் குரலே கேட்கிறது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பலத்தை அறிந்துள்ள காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை மூலமாக அரசியலில் அவர்களை முன்னேற்றி அதிகாரமளிக்க விரும்புகிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ்-பா.ஜ.க. இடையேயான வித்தியாசத்தை ஓர் உதாரணமாக குறிப்பிட விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி மக்களை ஒரு பேருந்தில் ஏற்றி, அதனை இயக்கும் அதிகாரத்தை அவர்களின் கையில் கொடுத்து, பேருந்தை அவர்களைக் கொண்டே இயக்குகிறது.
ஆனால், பா.ஜ.க.வைப் பொருத்தவரையில் அக்கட்சி மக்களை பேருந்தில் ஏற்றி, அமைதியாக இருக்க வைக்கிறது. பின்னர் அந்தப் பேருந்தை ஆர்.எஸ்.எஸ். மூலமாக இயக்குகிறது.
நாட்டில் திறமைசாலைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். உண்மையில் அவ்வாறு இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடத்தில் திறமை நிறைந்துள்ளபோதும், முன்னேறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வில்லை. எப்போதுமே உண்மையாக உழைப்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களது உழைப்பால் கிடைக்கும் லாபத்தை பிறர் அனுபவிக்கின்றனர்.
கடந்த 70 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் பேசினார்.