பிரதமரின் பயத்தால் மேலும் உயர்கிறது பெட்ரோல் விலை..!!
புதுதில்லி;
அமெரிக்க உத்தரவுக்கு அடிபணிந்து, ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை பாதியாக குறைத்துக் கொள்ள ஏற்கெனவே இந்தியா முடிவு செய்திருந்தது.இதனால், இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை மேலும் பலமடங்கு உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. அணு செறிவூட்டல் பணிகளை ஈரான் கைவிட்டால், அமெரிக்கா அந்நாட்டிற்கு சலுகைகளை அளிக்கும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக, பொய்யான குற்றச்சாட்டை வைத்த அமெரிக்கா, ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாகவும் தன்னிச்சையாக அறிவித்தது. அதுமட்டுமன்றி, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. ஈரானிடமிருந்து எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது உலக நாடுகளுக்கு மிரட்டலையும் விடுத்தது.இந்த மிரட்டலை சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், டிரம்ப் உத்தரவு பிறப்பித்த உடனேயே அதனை இந்தியா தலைமேல் ஏற்று, எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கப் போவதாக அறிவித்து விட்டது.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்வதில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில், ஈரானிடமிருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய்யைக் கூட இறக்குமதி செய்யாத நிலையை நோக்கி நவம்பருக்குள் இந்தியா செல்ல வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டியுள்ளது. இந்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்துள்ளன.
முதற்கட்டமாக இறக்குமதியைப் பாதியாகக் குறைத்து, பின்னர் படிப்படியாக முற்றிலும் இறக்குமதியை நிறுத்தி விடுவது என்பதுதான் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் திட்டம்.
அதாவது, ஈரானில் இருந்து நாளொன்றுக்கு 6 லட்சத்து 58 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அது தற்போது, நாளொன்றுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் பேரல்களாக – 45 சதவிகிதம் அளவிற்கு குறைக்கப்பட உள்ளது.இதில் சிக்கல் என்னவெனில், இறக்குமதியைக் குறைப்பதால் அல்லது முற்றிலும் நிறுத்திக் கொள்வதால், ஈரானுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்தியாதான் மிகப்பெரிய பொருளாதார இழப்பைச் சந்திக்கப் போகிறது.
ஏனெனில், இந்தியாவின்மேல் பரிதாபப்பட்டு, கச்சா எண்ணெய் விலையில் கணிசமான விலைத் தள்ளுபடியை இஸ்லாமிய குடியரசுக் நாடுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக, ஈரான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சலுகை அளித்து வருகிறது. கச்சா எண்ணெய்க்கான பணத்தை, ஏனைய நாடுகள் டாலராகவே பெற்று வந்தன. ஆனால், ஈரான் நாடு அதனை இந்திய ரூபாயாகவே பெற்றுக் கொண்டது. இதனால், அந்நியச் செலாவணி நெருக்கடியிலிருந்து இந்தியா பெருமளவு தப்பித்து வந்தது.
ஆனால், தற்போது ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை, பாதியாக குறைப்பதன் மூலம் மிகப்பெரிய பாதிப்பை இந்தியா சந்திக்கவுள்ளது. ரூபாய் பரிவர்த்தனையில் நடக்கும் வர்த்தகம், டாலருக்கு மாறுவதால், ரூபாய் மதிப்பு மேலும் சரியும். இதனால் பெட்ரோல் – டீசல் விலை மேலும் பல மடங்கும் அதிகரிக்கும்.தற்போதே இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை நூறு ரூபாயை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அது நூறு ரூபாயைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவை எதையும், மத்திய பாஜக அரசு எதையும் யோசிப்பதாக இல்லை. அமெரிக்காவின் சொல்பேச்சுக்கு, இந்திய மக்களின் நலனை காவுகொடுக்கும் வேலையில் கண்ணைமூடி இறங்கி விட்டது.இந்தியாவின் பிரதமர் மோடியின் பயத்தால் மக்கள்தான் பாதிக்கப்படப் போகிறார்கள்.
DINASUVADU