மோடியின் கையில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்குமா? : கெஜ்ரிவால் ..!
டெல்லியில் மத்திய அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு செயல்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாநில அரசு கேட்கும் பணிகளை செய்வது கிடையாது என ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டி வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்தில் தலையிட்டு பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் டெல்லி கவர்னர் மாளிகையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் கெஜ்ரிவால், டெல்லி அரசின் பணியை தடுக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேலை நிறுத்தத்திற்கு பின்னால் மோடியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், “டெல்லியில் மாநில அரசின் பணிகளை தடுக்க அதிகாரிகளின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இருக்கும் பிரதமரின் கையில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்குமா?” என கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று அவருக்கு இரு கடிதம் எழுதியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதற்கிடையே இன்று மாலை பிரதமர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி ஒன்றை ஆம் ஆத்மி முன்னெடுக்கிறது.
மாலை 4 மணியளவில் மாண்டி ஹவுஸ் அருகே கூடும் டெல்லி மக்கள், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியை மேற்கொள்ள உள்ளார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.