மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் சீன அதிபர்..!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு சென்ற பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வூகன் நகரில் சாதாரண முறையில் சந்தித்து பேசியது போல், மீண்டும் சந்தித்து பேசுவதற்காக அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஜின்பிங் ஏற்றுக்கொண்டார்.
இந்த தகவலை பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, இரு தலைவர்களும் இந்தியாவில் எந்த தேதியில் சந்தித்து பேசுவது என்பது பற்றி தற்போது முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.