மோடிக்கெதிராக மெகா கூட்டணி…தேவேகவுடா-குமாரசாமியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..!!

Default Image
பெங்களூருவில் தேவேகவுடா- குமார சாமியை நேற்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு சந்தித்து பேசினார்.
பெங்களூருவில் தேவேகவுடா- குமார சாமியை நேற்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசித்தனர்.இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு(2019) தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி அகில இந்திய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு டெல்லியில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோரை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தேவேகவுடா இல்லத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு நேற்று மாலை 4 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு தழுவிய அளவில் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். அந்த நோக்கத்தின் அடிப்படையில் இன்று (அதாவது நேற்று) முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை சந்தித்து ஆசி மற்றும் ஆதரவு பெற்றேன். நான் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு தேவேகவுடா முழு ஆதரவு தெரிவித்தார்.
மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அகற்றுவது தான் எங்கள் நோக்கம். அதுகுறித்து தேவேகவுடாவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர் சில ஆலோசனைகளை கூறினார். மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து விவாதித்தோம்.
இதற்கு முன்பு 1996-ம் ஆண்டு மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைத்தது. தேவேகவுடா பிரதமராக இருந்தார். அந்த அணிக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு வழங்கியது. நான் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன். இதனால் நாங்கள் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளது.
நாட்டை பாதுகாக்க வேண்டும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும், வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்பட மத்திய விசாரணை அமைப்புகளை, தன்னாட்சி அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் தற்போது உள்ள மத்திய அரசால் அந்த அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத் உள்பட பல்ேவறு மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்துகிறது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த திட்டத்தால் இதுவரை நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.
பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி அதிகரித்துவிட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் பதவியை பற்றி நாங்கள் தற்போது ஆலோசிக்கவில்லை. நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய நோக்கம். இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் பேசினேன். காங்கிரஸ் பெரிய கட்சி. மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மற்ற கட்சிகளை விட அந்த கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது.
நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகிறார்கள். அதற்கு கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவே நல்ல உதாரணம் ஆகும். இங்கு காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரித்து ஓட்டுப்போட்டுள்ளனர். வருகிற ஜனவரியில் மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒரு பெரிய மாநாட்டை நடத்துகிறார். அதே போல் கர்நாடகத்திலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநாடு நடத்த முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் எங்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்துகிறோம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு சந்திரபாபுநாயுடு கூறினார்.
இதைதொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், “நாடு முழுவதும் மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம். அந்த பணியில் சந்திரபாபுநாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். தேவேகவுடாவும், சந்திரபாபுநாயுடுவும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் நாட்டில் 1996-ம் ஆண்டு ஏற்பட்ட நிகழ்வு மீண்டும் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்