மோசமான வானிலையால் சிக்கிம் பயணத்தை ரத்து செய்த துணை ஜனாதிபதி..!
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சிக்கிம் மாநிலத்தில் இன்று முதல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாக்யாங்கில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதால், அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று புறப்பட்ட வெங்கையா நாயுடு பக்தோரா சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள லிபிங் ராணுவ தளத்திற்கு சென்று அங்கிருந்து காங்டாக் நோக்கி தரைமார்க்கமாக செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சிக்கிம் மாநிலத்தில் வானம் மேகமூட்டமாக இருந்ததால் அவரால் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துள்ளார் வெங்கையா நாயுடு. இதனை டுவிட்டரில் தெரிவித்த வெங்கையா நாயுடு, பக்தோராவில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் இடாநகருக்கு செல்ல உள்ளதாக கூறியுள்ளார்.