மும்பையில் பயங்கர தீ விபத்து!
மும்பை பல்லார்டு பியர் பகுதியில் சிந்தியா ஹவுஸ் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று மாலை 4 மணியளவில் திடீரென அந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளி வந்தது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.சிறிது நேரத்தில் தீ 3-வது மாடியில் இருந்த மற்ற அறைகளுக்கும் பரவியதுடன், 4-வது மாடியிலும் பற்றியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் விரைந்து வந்தனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது மாடிகளில் இருந்த ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது.தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.