கர்நாடகத்தில் வழக்கமாக கோடையில் மின்வெட்டு அமல்படுத்தப்படும். சில பகுதிகளில் அறிவிக்கப்படாமல் மின்வெட்டு இருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக குளிர்காலம் தொடங்கிய நிலையில், கர்நாடகத்தில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நகரின் மைய பகுதிகளில் மின்சார விநியோகம் எப்போதும் போல் உள்ளது. அந்த பகுதிகளில் சிறிய அளவில் மட்டும் மின் தடை ஏற்படுகிறது. ஆனால் நகரின் சற்று வெளிப்புறத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொம்மனஹள்ளி, பேகூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 6 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கர்நாடகத்தில் நிலக்கரி பற்றாக்குறையாக இருப்பதால், மின்வெட்டை அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நேற்று முடிவை அறிவிப்பதாக குமாரசாமி கூறினார்.இந்த நிலையில் குமாரசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நேற்று முடிவு செய்யப்பட்டிருந்த மின்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆயினும் இதுகுறித்து ஒரு அறிக்கையை குமாரசாமி வெளியிட் டார். அதில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு, கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிலக்கரியை ஒதுக்காததால், ராய்ச்சூரில் உள்ள அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் மத்திய மின்தொகுப்பில் இருந்து கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரமும் சரியான அளவில் கிடைக்கவில்லை. ஆயினும் நீர்மின் உற்பத்தி, சூரியசக்தி மின் உற்பத்தி ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி, கர்நாடகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.