மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு பிஜு ஜனதா தளம் கட்சியை களமிறக்க எதிர்க்கட்சிகள் வியூகம்..!
பாராளுமன்ற மேலவையான மாநிலங்களவையில் துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பிஜே குரியன் இருந்து வருகிறார். அவருடைய பதவிகாலம் விரைவில் முடியவிருக்கிறது. மீண்டும் குரியன் போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி செயல்படுவார். அவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். துணை சபாநாயகரை மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.
2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும், அதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையானது எதிர்க்கட்சிகள் வரிசையில் வலுத்து வருகிறது. மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் அல்லாத பிற கட்சியை சேர்ந்த உறுப்பினரை களமிறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டத்தில் கருத்து எழுந்துள்ளது.
காங்கிரஸ் அல்லாத மற்றும் காங்கிரஸ் ஆதரிக்கும் ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த தெரிக் ஒபிரையன் பணியாற்றி வருகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. சுகெந்து சேகர் ராய் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரசன்னா அச்சார்யாவை களமிறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களை கொண்டுள்ள, ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டாமல் ஒரே தொலைவில் விலகி வருகிறது. இதுவரையில் அக்கட்சி எந்தஒரு முடிவையும் எடுக்கவில்லை.
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவிற்கு எதிராக வாக்குகளை பெறும் வகையில் பிஜு ஜனதா தளத்தை முன்னிறுத்த திட்டமிடுகிறது. நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் இதுதொடர்பாக ஆலோசித்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சி மாநிலங்களவையின் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இருப்பினும் 245 உறுப்பினர்களை கொண்ட அவையில் வெற்றிப்பெற 122 வாக்குகள் தேவையாகும். பிஜு ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (6 எம்.பி.க்கள்) கட்சிகள் ஏற்கனவே காங்கிரசுக்கு ஆதரவு கிடையாது என அறிவித்துள்ளது, எனவே இக்கட்சிகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
பிராந்திய கட்சிகளும் பிஜு ஜனதா தளத்தை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக கூறப்படுகிறது. பா. ஜனதாவிற்கு எதிராக கூட்டணி என்ற கோரிக்கை வலுக்கும் நிலையில் பிஜு ஜனதா தளம் கூட்டணி தொடர்பாக எந்தஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, அக்கட்சியை தங்களுடைய வரிசையில் இழுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்படுகிறது.
மாநிலங்களவையில் இப்போது உறுப்பினர்கள்படி எதிர்க்கட்சிகள் வெற்றியை நெருங்கியுள்ளது, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகளுக்கு 115 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு 108 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. தேர்தலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (6 உறுப்பினர்கள்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (2 உறுப்பினர்கள்) மற்றும் பிஜு ஜனதா தளம் (9 உறுப்பினர்கள்) முக்கிய பங்கு வகுக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துவிட்டார். 10 வருடங்களாக மாநிலங்களவை சபாநாயகர் பதவியை வைத்திருக்கும் காங்கிரசும் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகயில்லை என்றும் தெரிகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியிடம் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.