மருந்துகள் மீது 50%க்கு மேல் லாபம் வைக்கக் கூடாது: சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது கெஜ்ரிவால் அரசு..!

Default Image

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மருந்துகள் மீது 50%க்கும் மேல் லாபம் வைக்கக் கூடாது என்று டெல்லி அரசு வரைவு சட்டத்திருத்தம் கொண்டு வந்து அதனை பொதுமக்கள் கருத்துக்காக 30 நாட்கள் வைக்கவுள்ளது.

மக்கள் கருத்து மற்றும் ஆட்சேபணைகளைக் கேட்ட பிறகு டெல்லி நர்சிங்ஹோம்ஸ் சட்டத்தில் சீர்த்திருத்தம் செய்து மீறும் மருத்துவமனைகள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட தண்டனைகளை அளிக்குமாறு செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2017-ல் அதிகக் கட்டணக்கொள்ளை நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக வரும் புகார்களைக் கவனிக்க 9 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் கூறினார்.

இதன் படி அத்தியாவசிய உயிர்காப்பு மருந்துகள் என்று தேசியப் பட்டியலில் இல்லாத மற்ற மருந்துகளுக்கான லாப உச்ச வரம்பு 50% தான். அதே போல் உட்பொருத்தும் உபகரணம், மருத்துவம் ஆகியவற்றுக்கான உச்சபட்ச லாப விகிதம் 35%தான் இருக்க வேண்டும். லாப விகிதம் 50% மட்டுமே இருக்க வேண்டும், எம்.ஆர்.பி விலை இதைவிடக் குறைவாக இருந்தால் அந்த விலைக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

மரணித்தவர்களின் கவுரவம்:

அதே போல் மருத்துவமனையின் எமெர்ஜன்சி பிரிவு அல்லது விபத்துப் பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகள் சேர்க்கப்பட்ட 6 மணி நேரத்தில் இறந்து விட்டால் மொத்த பில் தொகையில் 50% கழிவு அளிக்கவும் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணிநேரத்தில் மரணித்தால் மொத்த பில் தொகையில் 20% கழிவு அளிக்கப்பட வேண்டும்.

அதேபோல் பில் தொகையைக் கட்டாவிட்டால் நோயாளியின் உடலைத் தரமாட்டோம் என்று மருத்துவமனை நிர்வாகம் ஒரு போதும் மறுத்தல் கூடாது. இது மரணித்தவர்களின் கவுரவத்தைக் காப்பாற்ற செய்யப்படும் மாற்றமாகும்.

அதேபோல் மருத்துவமனைகள் ஒவ்வொரு நோய்க்கும் ‘பேக்கேஜ்கள்’ வைத்துள்ளன, அது இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் மூடுமந்திரம் பிரச்சினைக்குள்ளாகும் என்றும் ஒரு அறுவை சிகிச்சை முடித்த பிறகு கூடுதல் அறுவை சிகிச்சை அல்லது இன்னொரு சிகிச்சை முறைத் தேவைப்படுகிறது என்றால் இந்த 2வது அறுவைசிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சைக்கான பில்லில் 50% கழிவு கொடுக்கப்பட வேண்டும் என்றும் வரைவுத் தீர்மானம் முன்மொழிந்துள்ளது.

ஆனால் தனியார் மருத்துவமனைகள் இந்த கெடுபிடிகளை மதிக்காமல் நோயாளிகளை அனுமதிப்பதிலேயே வடிகட்டி பலரை அனுமதிக்க மறுப்பதும் நடந்தால் நோயாளிகள் நிலமை என்ன என்பது பற்றி மக்கள் கருத்து கேட்கப்பட்டு அதன் பிறகு முடிவெடுக்கபடும் என்று தெரிகிறது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது, மருந்துகள் மீது 50% தான் லாபம் வைக்க முடியும் என்றால், மருந்து நிறுவனங்களிடம் மருத்துவமனைகள் பேரம் பேசத் தொடங்கும், 20%, 30% ஃப்ரீ என்பது போக 50-60% கேட்கலாம் (ஏற்கெனவே இவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன) இதனால் மருந்துகளின் தரம் குறையலாம்.. நிறைய சிக்கல்கள் உள்ளன, ஆனாலும் இந்தியாவில் முதல் முறையாக மக்களை முன்னிறுத்தி இது போன்ற ஒரு முயற்சியை டெல்லி அரசு மேற்கொள்வது ஒரு முன்னுதாரணமாக அமையும் என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்