மனைவிகளிடமிருந்து கணவன்களை பாதுகாக்க வருகிறது ‘புருஷா கமிஷன்’..!
ஆந்திர பிரதேச மகிளா கமிஷனின் தலைவியும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான நன்னாபேனி ராஜகுமாரி சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய அவர், ஆண்களின் நலனுக்காக தனியாக கமிஷன் அமைக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘புருஷா கமிஷன்’ என்ற பெயரில் தனியாக ஒரு ஆணையம் அமைக்க வலியுறுத்தியுள்ள அவர், பெண்களின் அராஜகத்திலிருந்து ஆண்களை காக்க இந்த ஆணையம் துணை நிற்கும் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், கடந்த சில நாட்களாக தவறான உறவை நம்பி போகும் மனைவிகள் ஆண்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இவற்றை தடுக்கவே ‘புருஷா கமிஷன்’ அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆண்களுக்கும் சமமான அளவு நியாயம் கிடைக்கவும், ஆண்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதை தடுக்கவும், இந்த கமிஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜகுமாரியின் இந்த கோரிக்கை தேவையற்றது என கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெண்கள் அமைப்பினர், நாள்தோறும் ஆண்களால் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வரும் நிலையில், மகிளா ஆணையத்தின் தலைவியின் இந்த கருத்து ஏற்க முடியாதது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கருத்தை கூறியதற்காக மகிளா ஆணையத்தின் தலைவி பதவியை ராஜகுமாரி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.