மத்திய பிரதேசமும்….187 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களும்…..
மத்திய பிரதேசத்தில் தேர்வாகியுள்ள புதிய எம்.எல்.ஏ.க்களில் 187 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்களில் 94 பேர்மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 11ம் தேதி நடைபெற்ற நிலையில், பி.எஸ்.பி., எஸ்.பி. மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. மாநில முதலமைச்சராக காங்கிரசை சேர்ந்த கமல்நாத் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், மத்திய பிரதேச தேர்தல் கண்காணிப்புக் குழு மற்றும் ஜனநாயக சீரமைப்புக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், மாநிலத்தில் தேர்வாகியுள்ள 230 எம்.எல்.ஏக்களில், 187 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் 41 சதவிகிதத்தினர்,அதாவது 94 பேர் மீது கொலைக்குற்றம் உள்ளிட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக விஜய்ராகவ்கர் தொகுதியை சேர்ந்த பாஜகவின் சஞ்சய் சத்யேந்திர பதக், 226 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ளதாகவும், குறைந்தபட்சமாக பந்தானா தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம் தாங்கோர், 50 ஆயிரத்து 749 ரூபாய் அளவில் சொத்துக்களை கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்களை கொண்ட 16 எம்எல்ஏக்கள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்யாமல் உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.