மத்திய பட்ஜெட் 2018-ஆரம்ப சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வானது வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முடிகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-19ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் சுகாதாரத் துறையில் அதிகமான அறிவிப்புகளைக் கொண்டிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பாக, ஆரம்ப சுகாதாரத்திற்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்றும் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீட்டில் மூன்றில் இரண்டு பங்கு ஆரம்ப சுகாதாரத்திற்கு அளிக்கப்படும் என்றும் டிரிபியூன் நாளிதழ் தெரிவிக்கிறது. மேலும், 1.5 லட்சம் கிராமங்களை சுகாதார மையங்களாக உருவாக்கப்படுவது பற்றியும் அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.