மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மொழிப்பாடங்கள் பட்டியலில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களை பணியமர்த்துவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. இந்தத் தேர்வில் மொத்தம் 5பாடங்களில் 2 மொழிப்பாடங்களாகும். ஆங்கிலம் மற்றும் 19 இந்திய மொழிகள் என 20மொழிகளில் இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தமுறை தேர்வுக்கான மொழிப்பாடங்கள் பட்டியலில் இருந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளி, குஜராத்தி உள்ளிட்ட 17மொழிகள் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதை மறுத்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளும் மொழிப்பாடப் பட்டியலில் உள்ளதாகவும், அவற்றைப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.