மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதுச்சேரி அரசு கொறடா தன்னிச்சையாக தாக்கல் செய்கிறார்…!
முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதுச்சேரி அரசு கொறடா தன்னிச்சையாக தாக்கல் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் நாராயணசாமி தலைமையில் அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தை அதிமுக,,என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.இக்கூட்டத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
”உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்து ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பினோம். மத்திய அரசு அனுமதி இல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவித்தார். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனு தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்டார்.
நீதிமன்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் கோப்பு அனுப்பினேன். ஆனால், ஆளுநர் பழைய நிலையை வலியுறுத்தினார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
இந்நிலையில் எங்களின் அரசு கொறடா அனந்தராமன் உச்ச நீதிமன்றத்தில் காவிரி கடை மடையான காரைக்கால் பாதிக்காமல் இருக்க, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தன்னிச்சையாக தாக்கல் செய்கிறார்.
மேலும் ஆளுநரிடம், “காங்கிரஸ்-திமுக கட்சிகளின் நிலை, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க உரிமையுள்ளது என்று கூற உள்ளேன். தற்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, கருத்துகளைக் கேட்டேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய அதிகாரம் தந்துள்ளனர். தொடர்ந்து அரசு காரைக்கால் விவசாயிகள் நலன் கருதி எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் தொடர் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தரும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளின் நலனை புதுச்சேரி காங்கிரஸ் விட்டுத்தராது. போராடவும் தயார்.
தமிழக அரசும் புதுச்சேரியை வஞ்சித்து வருகிறது. உரிய தண்ணீரை தமிழக அரசு தருவதில்லை. இது வேதனை அளிக்கிறது. இக்கூட்டத்தில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை. காவிரி விஷயத்தில் அவர்களின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். புதுச்சேரியில் மதசார்பற்ற அணி ஒருங்கிணைந்து தொடர்ந்து பாடுபடுவார்கள் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் மக்கள் பிரதிநிதிகள் காவிரி விவகாரத்துக்காக ராஜினாமா செய்யும் எண்ணம் உள்ளதா என்று கேட்டதற்கு, “தமிழகத்தில் ராஜினாமா செய்த பிறகு கேள்வி கேளுங்கள்” என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.