மத்திய அரசு அதிரடி: விமான நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடியில் சலுகை
நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகைகள் வழங்க உள்ளது.
நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு விமான நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடியில் முன்னுரிமை சேவை வழங்கப்படும்.
வருமான வரியை எத்தனையோ பேர் நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். ஒழுங்காக வரி செலுத்துகிறவர்களோ, ஏமாற்றுகிறவர்களுக்கு மத்தியில் ஒழுங்காகவும், நேர்மையாகவும் நாங்கள் வரி செலுத்துவதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, ஒழுங்காக வரி செலுத்துவோரின் நேர்மைக்கு தகுந்தபடி அவர்களுக்கு முன்னுரிமை சலுகைகள் வழங்கலாம் என யோசனை தெரிவித்தார். இப்போது அது செயல்வடிவம் பெறுகிறது.
நேர்மையாகவும், ஆண்டுதோறும் தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துகிறவர்களை அங்கீகரித்து, அவர்களை கவுரவிக்கிற வகையில், ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி, விமான நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க பரிசீலிக்கப்படுகிறது.இது தொடர்பான முடிவினை வருமான வரித்துறை சார்ந்த கொள்கைகளை வகுக்கிற பொறுப்பில் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் குழு விரைவில் எடுக்க உள்ளது.
இந்த முடிவு, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.இப்படி நேர்மையாக வருமான வரி செலுத்துகிறவர்களை தனித்து அடையாளம் காட்ட ஏதுவாக அவர்களுக்கு என ஒரு சிறப்பு எண் தரலாமா அல்லது அவர்களது பான் அட்டையில் சிறப்பு குறியீடுகள் செய்யலாமா என பரிசீலிக்கப்படுகிறது.
DINASUVADU