மத்திய அரசுடன் மோதிய ரிசர்வ் வங்கியின் ஆளுனர்… பதவி விலகலா..?
மத்திய அரசுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் படேல் பதவி விலக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் எனத் தெரிவித்தார். 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதைக் கருத்திற்கொண்டே ஆச்சார்யா பேசியதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணம் சென்றுள்ள நிலையில் ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் அரசுடனான கருத்து வேறுபாட்டை இவ்வாறு வெளிப்படையாகப் பேசியது மிகுந்த அதிருப்தி அளிப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலடி தரும் வகையில் ரிசர்வ் வங்கியைக் குற்றம்சாட்டி அருண் ஜேட்லி பேசினார். ‘‘2008 முதல் 2014-ம் ஆண்டுவரை, வங்கிகள் தங்கள் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அனைவருக்கும் கடன் அளித்தன. யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்ற பாகுபாடு இல்லாமல் கடன் கொடுத்தன. இதைத் தடுப்பதற்கு ரிசர்வ் வங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போதே ரிசர்வ் வங்கி இதைத்தடுக்காத காரணத்தால்தான் இப்போது வாராக்கடன் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது’’ எனக் கூறினார்.மத்திய அரசுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் படேல் பதவி விலக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ரிசர்வ் வங்கி தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
dinasuvadu.com