மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு பணத்து மேல பேய் பிடிச்சிருக்கு ! ப.சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி அச்சடித்த 2000 நோட்டுகள் பெரும் பண முதலைகளுக்கும், பதுக்கல்காரர்களுக்கே உதவுகிறது என்று விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஆந்திரா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், குஜராத், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் பல நகரங்களில் பணத்தட்டுபாடு கடுமையாக நிலவுகிறது. பணமதிப்பிழப்பு காலத்தில் இருந்ததைப் போல் ஏடிஎம் எந்திரங்களில் பணம் இல்லாமல் பூட்டிக்கிடக்கின்றன.
இந்த நிலை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து மக்கள் பணம் இருக்கும் ஏடிஎம்களை தேடித் அலையும் நிலைக்கு வந்துவிட்டனர். இந்த நிலை விரைவில் சீரடையும், கூடுதலாக 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படும் எனத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் வங்கி மோசடிகளால் மக்கள், வங்கி முறையின் மீதே நம்பிக்கை இழந்துவிட்டனர். இதனால், மக்கள் தங்களிடம் சேமிப்பாக இருக்கும் பணத்தை வங்கியில் வந்து டெபாசிட் செய்ய தயங்குகிறார்கள்.
பணமதிப்பிழப்பு எனும் பேய் மீண்டும மோடி அரசை பிடித்து ஆட்டத் தொடங்கி இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 17 மாதங்களாகியும் கூட இன்னும் ஏடிஎம் மையங்கள் ஏன் காலியாகக் கிடக்கின்றன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்தபின், மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது. ஆனால், தற்போது அந்த 2000 ரூபாய் நோட்டுகளை சில பெரும் பணமுதலைகள், பதுக்கல்காரர்கள் பதுக்கிவிட்டனர். 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என்பது பெரும் பதுக்கல்காரர்களுக்கு உதவுவதற்குதான் என்பது எப்போதோ நமக்குத் தெரியும்.
நாட்டில் பணத்தட்டுப்பாடு கிடையாது என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பது மனநிறைவை அளிக்கவில்லை. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிடுகிறது என்றால், ஏன் பணப்பற்றாக்குறை மக்களிடத்தில் ஏற்படுகிறது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
பணமதிப்பிழப்பு தடைக்குபின், பணப்புழக்கம் என்பது 2.75 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. அப்படிஎன்றால், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் சீரான அளவில் பணப்புழக்கத்தை கொண்டுவர அனுமதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
சாமானிய மக்கள் வங்கி முறை மீதான நம்பகத்தன்மை குறைவு காரணமாக, தங்களிடம் மீதமிருக்கும் பணத்தை, சேமிக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவரவில்லை என சந்தேக்கிறேன். இதற்கு அனைத்துக்கும் வங்கி மோசடிதான் காரணம்.
நான் வங்கி முறையில், வர்த்தகத்தில் கொண்டுவரப்படும் டிஜிட்டல் முறையை ஆதரிக்கிறேன். ஆனால், பணப்புழக்கத்தை திடீரென ஒட்டுமொத்தமாகக் குறைத்து டிஜிட்டல்முறையை கொண்டுவரமுடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.