மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு…!!
மத்தியப் பிரதேசம், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்தமுறையும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. கடைசி நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்கள் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதேபோல் மிசோரம் மாநிலத்திலும் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
dinasuvadu.com