மத்தியக் குழு கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு!
மத்தியக் குழுவினர் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து,அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கேரள மாநிலத்தில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மூளைக்காய்ச்சல் அறிகுறிகளோடு சிகிச்சை பலனின்றி 11 உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேருக்கு நிபா பாதிப்பு இருந்ததை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா ((KK Shailaja)) உறுதிப்படுத்தியுள்ளார். புனே ஆய்வகத்தில் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர், நிபா வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் கோழிக்கோடு மாவட்டத்திலும், 4 பேர் மலப்புரம் மாவட்டத்திலும் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் பெரம்பரா பகுதியில் சங்கரோத் ((Changaroth)) கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ((கோழிக்கோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவர் உயிரிழந்தார்.))
நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 10-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளத்தில் இந்த வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும். கேரளத்தில் நிபா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவின்பேரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சார்பில் குழு ஒன்றும் கேரளத்திற்கு சென்றுள்ளது.
இதனிடையே, மணிப்பால் வைரஸ் ஆய்வு மையத்தை சேர்ந்த அருண்குமார், பாதிக்கப்பட்ட கேரள பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிணறுகளில் வசிக்கும் வவ்வால்கள் மூலம் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கால்நடைத்துறை மற்றும் வனத்துறை பணியாளர்கள் உதவியுடன் வவ்வால்கள் பிடிக்கப்பட்டு, சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.